மகா பிரத்யங்கரா தேவி பூஜை
சாணார்பட்டி அருகே ஆதிபரஞ்சோதி சகலோக சபை கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி மகா பிரத்யங்கரா தேவி பூஜை, நரசிம்ம பூஜை நடந்தது.
சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லாத்தான்பாறையில் ஆதிபரஞ்சோதி சகலோக சபை கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி மகா பிரத்யங்கரா தேவி பூஜை, நரசிம்ம பூஜை நடந்தது. கோவில் நிர்வாகி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி பூஜைகளை நடத்தினார். இதையொட்டி பிரத்யங்கரா தேவி, நரசிம்மசுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு கணபதி பூஜையுடன் யாகம் தொடங்கியது. பின்னர் குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய காய்ந்த மிளகாய்கள், வெண் கடுகு ஆகியவை கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடைபெற்றது.
திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சாணார்பட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பனை ஓலைகள், காகிதத்தில் எழுதி யாககுண்டத்தில் இட்டும், எலுமிச்சை பழங்களை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர். இதுதவிர வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் இணையவழியாக பூஜையில் பங்கேற்றனர்.
முன்னதாக அங்குள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு பூஜையும், கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு கோ பூஜையும் நடந்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் பசுக்களுக்கு அகத்திகீரை, தவிடு, மாட்டு தீவனங்கள் கொடுத்து வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.