மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியம், ஆலம்பாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி ெபற்ற மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதியன்று இரவு கொள்ளிடத்தில் இருந்து காப்பு மரம் எடுத்து வந்து, காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு மகாசக்தி மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி தேரில் மகாசக்தி மாரியம்மன் சிலையை எழுந்தருள செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆலம்பாடி, மேட்டூர், தங்க சாலை, செம்பியக்குடி, குலமாணிக்கம், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம், விரகாலூர், திண்ணகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும் அவரவர் வீடுகளுக்கு முன்பு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதையடுத்து இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு அம்மன் சிலை தாங்கிய முத்துப்பல்லக்கு திருவீதியுலா நடைபெறுகிறது. நாளை(சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு, விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. தினமும் வாணவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.