சூறைக்காற்றுக்கு சாய்ந்த மக்காச்சோள பயிர்கள்


சூறைக்காற்றுக்கு சாய்ந்த மக்காச்சோள பயிர்கள்
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சூறைக்காற்றுக்கு சாய்ந்து மக்காச்சோள பயிர்கள் நாசம் அடைந்துள்ளன.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூர், ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது பல இடங்களில் பூக்கும் தருவாயில் மக்காச்சோள பயிர்கள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பழனி சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பரவலான மழை பெய்து வருகிறது. அந்தவகையில், நேற்று முன்தினம் இரவு பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு ஆயக்குடி, டி.கே.என்.புதூர் பகுதியில் பயிரிட்டிருந்த பல ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து நாசமானது. இந்த பயிர்களை கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று பயிர் சேத விவரங்களை கணக்கெடுத்தனர். சூறைக்காற்றால் பல ஏக்கர் அளவில் மக்காச்சோள, சூரியகாந்தி பயிர்கள் சேதம் அடைந்து விட்டது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story