வெயில் தாக்கத்தால் மக்காச்சோள செடிகள் கருகின
செம்பனார்கோவில் அருகே வெயில் தாக்கத்தால் மக்காச்சோள செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செம்பனார்கோவில் அருகே வெயில் தாக்கத்தால் மக்காச்சோள செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3 போகம் நெல் சாகுபடி
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3 போகமும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர கரும்பு, வாழை, பருத்தி போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. தண்ணீர் இருப்பை பொறுத்து சாகுபடி பரப்பளவு ஆண்டுதோறும் மாறுதல் அடைந்து வருகிறது.
இதில் நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விவசாயத்துடன், மீன்பிடி தொழிலும் பிரதான தொழிலாக விளங்குகிறது.
மக்காச்சோளம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தை சேர்ந்த செம்பனார்கோவில், பரசலூர், கீழையூர், முடிகண்டநல்லூர், கிடாரங்கொண்டான், புன்செய், கஞ்சா நகரம், காலகஸ்திநாதபுரம், ஆறுபாதி, காழியப்பநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல், சீனி கரும்பு, செங்கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு, பாகற்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கொத்தவரை, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, முள்ளங்கி உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
கருகிய பயிர்கள்
மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் சுட்டெரித்தது. கோடையையொட்டி பயிரிடப்பட்டிருந்த காய்கறி பயிர்கள் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் கருகின. செடிகள் வாடி, வதங்கியதால் எதிர்பார்த்த மகசூல் இன்றி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இந்த நிலையில் செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த மக்காச்சோள பயிரில் ஒரு ஈடு அறுவடைக்குப் பிறகு வெயில் தாக்கத்தால் செடிகள் காய்ந்து கருகிவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.