பேரையூர் தாலுகாவில் மக்காச்சோளம் கொள்முதல் மையம் - விவசாயிகள் கோரிக்கை
பேரையூர் தாலுகாவில் மக்காச்சோளம் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பேரையூர்,
பேரையூர் தாலுகாவில் மக்காச்சோளம் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மக்காச்சோளம் சாகுபடி
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஆகிய ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள கிராம பகுதிகளில், ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை நம்பி இறவை மற்றும் மானாவாரி மக்காச்சோள சாகுபடி நடைபெறும். ஆடி மாதம் 20-ந் தேதி முதல் ஆவணி 20-ந்தேதி வரை மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்படும்.
2 ஒன்றியங்களிலும் சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர் ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு வரும்.அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை இப்பகுதி விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இதனால் எதிர்பார்த்த அளவு விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை.
லாபம் இல்லை
பேரையூர் தாலுகாவில் விளையும் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் எத்தனையோ முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்படவில்லை. மக்காச்சோளத்தை அரசு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளிடம் மக்காச்சோளத்தை விற்பனை செய்யும் பட்சத்தில் விவசாயிகளுக்கு போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை.
வியாபாரிகள் என்ன விலை சொல்கிறார்களோ அதன் அடிப்படையிலேயே விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.இதை போக்கும் வண்ணம் பேரையூர் தாலுகாவில் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைத்தால் விவசாயிகளுக்கு நல்ல முறையில் லாபம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
கொள்முதல் மையம்
மதுரை மாவட்டத்திலேயே பேரையூர் தாலுகாவில் தான் மிக அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பேரையூர் தாலுகாவில் சாப்டூர், பெருங்காமநல்லூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் மையம் இருப்பது போல் மக்காச்சோளம் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து பி.அம்மாபட்டி விவசாயி கணேசன் என்பவர் கூறியதாவது:- அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை எங்கள் கிராமத்துக்கு வரும் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம். மக்காச்சோளத்துக்கு என்று நிரந்தர விலை இல்லை. பேரையூர் பகுதியில் கொள்முதல் மையம் அமைத்தால் எங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். தற்போது ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் மக்காச்சோளம் அறுவடை செய்யப்படும் நிலையில் மக்காச்சோளத்தின் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.அதனால் இப்பகுதியில் மக்காச்சோளம் கொள்முதல் மையம் அமைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.