மக்காச்சோளம் விலை உயருமா?
மக்காச்சோளம் விலை உயருமா?
போடிப்பட்டி,
உடுமலை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விலை உயருமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மானாவாரி
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவம் தப்பிய மழை, படைப்புழு தாக்குதல், மயில், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். நடப்பு ஆண்டில் உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் மக்காச்சோளம் விலை குறைந்துள்ளதால் விலை உயருமா? என்ற எதிர்பார்ப்பில் ஒருசில விவசாயிகள் மக்காச்சோளத்தை இருப்பு வைக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோழித்தீவன உற்பத்தியில் முக்கிய மூலப் பொருளாக மக்காச்சோளம் உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்துக்கான தேவை உள்ளது. ஆனால் கோழித்தீவன உற்பத்தியாளர்கள் வெளி மாநிலங்களிலிருந்து அதிக அளவில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கின்றனர். இதனால் மக்காச்சோளத்துக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது. கடந்த ஆண்டில் ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2 ஆயிரத்து 800 வரை விற்பனையானது. தற்போது ரூ.2 ஆயிரத்து 200 என்ற அளவிலேயே விற்பனையாகிறது. ஆனால் படைப்புழுக்களிடமிருந்து பாதுகாக்க மருந்து தெளித்தல், மகசூல் அதிகரிக்க உரமிடுதல் என அனைத்துவிதமான செலவுகளும் அதிகரித்துள்ளன.
விலை உயருமா?
எனவே வரத்து குறையும்போது விலை உயரும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். பல கிராமப் பகுதிகளில் போதுமான அளவில் உலர் களங்கள் இல்லை.இருக்கும் உலர் களங்களும் பராமரிப்பில்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது.இதனால் அறுவடை செய்த மக்காச்சோளத்தை உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலுள்ள உலர் களங்களில் கொண்டு வந்து காய வைத்து விற்பனை செய்கிறோம்/
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.