மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா?


மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு - கொலையா?
x

மதுரவாயல் அருகே காருக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் கார் ஒன்று கடந்த 2 நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. டிரைவர் இருக்கையில் அமர்ந்து இருந்த நபரும் காரில் இருந்து இறங்காமல், தூங்கிய நிலையிலேயே இருந்தார்.இதற்கிடையில் காரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காரின் கதவை திறந்து பார்த்தனர். அதில் காருக்குள் டிரைவர் இருக்கையில் அமர்ந்து இருந்த ஆண், இறந்து கிடப்பது தெரிந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. எனவே அவர் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.


போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கால் டாக்சி டிரைவரான அவர், காரை அந்த இடத்தில் நிறுத்தி விட்டு தூங்கியதாக தெரிகிறது. ஆனால் மர்மமான முறையில் இறந்து விட்டதால் கடந்த 2 நாட்களாக கார் அங்கேயே நின்று உள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

காரில் ஏ.சி.யை போட்டு கதவை பூட்டிவிட்டு தூங்கியதால் கியாஸ் கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறி இறந்தாரா? அல்லது மாரடைப்பால் காருக்குள் இறந்து கிடந்தாரா? இல்லை யாராவது அவரை கொலை செய்துவிட்டு உடலை காருக்குள் வைத்து பூட்டி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story