குப்பையில் பிணமாக கிடந்த ஆண் சிசு
பழனி அருகே குப்பையில் ஆண் சிசு பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகள், தொண்டுப்பட்டி என்ற இடத்தில் கொட்டப்படுகின்றன. நேற்று மாலை தொண்டுப்பட்டி குப்பைமேட்டு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டன. மேலும் துணி போன்ற எதையோ நாய்கள் இழுத்து கொண்டிருந்தன. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், நாய்களை துரத்திவிட்டு அங்கே சென்று பார்த்தனர். அப்போது துணி சுற்றிய நிலையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் சிசு ஒன்று பிணமாக கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக பழனி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சிசுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆண் சிசுவை குப்பையில் வீசி சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடுகின்றனர். கொலை செய்து வீசி சென்றாரா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குப்பையில் ஆண் சிசு பிணமாக கிடந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.