போலி ஆவணம் தயாரித்து நில மோசடி புகார்
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி புகார்
திருப்பூர்
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் நேற்று காலை திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீமிடம் ஒரு மனு கொடுத்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-எனது தாத்தா வழி பாத்தியப்பட்ட நிலம் 7½ ஏக்கர் நெருப்பெரிச்சலில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.20 கோடியாகும். இந்த நிலத்தில் எனக்கு பாத்தியப்பட்ட சொத்தில் இருந்து 2½ ஏக்கர் நிலத்தை எனது கையெழுத்தில்லாமல் வேறு நபருக்கு எனது குடும்பத்தினர் கிரையம் செய்துள்ளனர். எனது பங்கு எனக்கு தெரியாமல் கிரையம் மற்றும் செட்டில்மெண்ட் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்ததும் திருப்பூர் சார்பதிவாளர் இணை எண்.1-ல் சென்று தடங்கல் மனு கொடுத்தேன். சம்பந்தப்பட்ட 2 ஆவணங்களை ரத்து செய்வதாக சார்பதிவாளர் தெரிவித்தார். அதன்பிறகு ரத்து செய்யவில்லை.அங்கிருந்தவர்கள் என்னை ஒருமையில் பேசி மனஉளைச்சலை ஏற்படுத்தினார்கள். நான் கையெழுத்து போட்டு வழங்கியதைப் போல் போலியாக விடுதலை பத்திரங்களை தயாரித்து வழங்கியுள்ளனர். போலியாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த ஆவணங்களை பயன்படுத்தி புதிய பத்திரப்பதிவு செய்யாமல் இருக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்துள்ளார்.