ரேஷன் கடையில் முறைகேடு; விற்பனையாளர் பணிஇடை நீக்கம்
மதுரை அருகே ரேஷன் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளர் பணிஇடை நீக்கப்பட்டார்.
மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளை கடந்த (ஜூன்) மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது வேலை நேரத்தில் கடையை திறக்காமல், ரேஷன் பொருட்களை முறையாக வினியோகம் செய்யாமல், இருப்பு குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. இவற்றில் பெரிய அளவில் முறைகேடு செய்த அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி ரேஷன் கடை விற்பனையாளர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.