'மாமனிதன் வைகோ' ஆவணப்படம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பாராட்டு


மாமனிதன் வைகோ ஆவணப்படம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு பாராட்டு
x

‘மாமனிதன் வைகோ' ஆவணப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டு பாராட்டினார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பயணத்தை விரிவாக விளக்கும் வகையில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தயாரித்து, இயக்கிய 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றில் நடைபெற்றது.

விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். கவிஞர் வைரமுத்து முன்னிலை வகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் ஒலிபரப்பானது.

லட்சியம், தியாகம்

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த விழா நடைபெறும் சத்யம் தியேட்டரில் திரைப்படத்தில் நடிக்கக்கூடிய கதாநாயகர்களை பார்த்திருக்கிறோம். இன்றைய விழாவில் 'ரியல் ஹீரோ' என்றால் வைகோதான்.

அவர் உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல, கொள்கையிலும், லட்சியத்திலும், தியாகத்திலும் உயர்ந்திருக்கக்கூடியவர். வைகோ பங்கேற்கும் கூட்டம் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் எங்கு நடந்தாலும், சைக்கிளில் அல்லது ஸ்கூட்டரில் போய் கூட்டத்தோடு கூட்டமாக இருந்து கேட்டு ரசித்தவன் நான்.

துரை வைகோவுக்கு பாராட்டு

56 வருட கால வைகோவின் அரசியல் வாழ்க்கையை 1½ மணி நேரத்தில் கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் மிகச்சிறப்பாக ஆவணப்படத்தை துரை வைகோ உருவாக்கி உள்ளார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கருணாநிதி உடல் நலிவுற்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக வைகோ வந்திருந்தார். உடனடியாக யாரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அந்த சூழ்நிலையிலும் கூட கருப்பு துண்டை பார்த்தவுடனே அடையாளம் கண்டுபிடித்து சிரித்தார்.

தொடர்ந்து பணியாற்ற வேண்டும்

வைகோவை பார்த்து கையை நீட்டினார். வைகோ ஓடிவந்து கருணாநிதியின் கையைப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார். நான் பக்கத்தில் இருந்து தட்டிக்கொடுத்து, "அண்ணே, அழாதீங்க, சமாதானமா இருங்க" என்று சமாதானப்படுத்தினேன். இன்னும் அந்த காட்சி எனக்கு பசுமையாக உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடங்கள் எல்லாம் ஒதுக்கீடு செய்த நேரத்தில் வைகோவிடம் உரிமையோடு சொன்னேன். உங்களது உடல்நலன் எனக்கு முக்கியம். எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கு முக்கியம். அதுமட்டுமல்ல, நீங்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியாது. ஆனால் மாநிலங்களவையில் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்றேன்.

என்னுடைய ஆசையை ஏற்றுக்கொண்டார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வைகோ தனது உடல்நலத்தை பாதுகாத்துக்கொண்டு, இந்த சமுதாயத்துக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும், பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்த்தி பேசியவர்கள்

விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழகக்குமார், வக்கீல் எஸ்.வெற்றிவேல், மாநில இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story