அடகு கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய ஊழியர் கைது 37½ பவுன் நகைகள்-2 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

அடகு கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக   நாடகமாடிய ஊழியர் கைது   37½ பவுன் நகைகள்-2 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு
x

மெலட்டூர் அருகே அடகு கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 37½ பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:-

மெலட்டூர் அருகே அடகு கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 37½ பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.

அடகு கடையில் கொள்ளை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சகோதரர்கள் தமிழ்ச்செல்வன், சரவணன், கார்த்திகேயன். இவர்கள் தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே இரும்புதலை கிராமத்தில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

இங்கு திருப்பத்தூரை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 72) என்பவர் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் ராஜேந்திரனை தாக்கி விட்டு கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதாக மெலட்டூர் போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நாடகம்

இந்த வழக்கில் ராஜேந்திரனிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தானே நகைகளை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தன்னை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது தெரிய வந்தது.

மேலும் கொள்ளையடித்த நகைகளை சாலியமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டில் பதுக்கி வைத்ததும் தெரிய வந்தது.

தங்க நகைகள்-வெள்ளி பொருட்கள் மீட்பு

இதையடுத்து அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 37½ பவுன் நகைகள், 2 கிலோ 601 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை ராஜேந்திரனிடம் இருந்து போலீசார் மீட்டனர்.

கைது

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடகு கடையில் ஊழியரே நகைகளை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story