அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சுழி,
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று இராமசாமிபட்டி வழியாக நல்லாங்குளம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை பாளையம்பட்டி பகுதியை சேர்ந்த நமச்சிவாயம் என்பவர் ஓட்டினார். இந்த நிலையில் தும்முசின்னம்பட்டி கிராமத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் நல்லாங்குளம் நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது க.விலக்கு அருகே வந்தபோது தும்முசின்னம்பட்டி மேலத்தெரு பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது21) என்பவர் இரு சக்கர வாகனத்தில் நடு ரோட்டில் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. உடனே டிரைவர் நமச்சிவாயம் அவரை ஒதுங்கி நிற்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன் பஸ்சில் ஏறி டிரைவர் நமச்சிவாயத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நமச்சிவாயம் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.