என்ஜினீயரை தாக்கி பணம்- செல்போன் பறித்தவர் கைது
என்ஜினீயரை தாக்கி பணம்- செல்போன் பறித்தவர் கைது
திருவாரூர் மாவட்டம் மடபுரம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 48). என்ஜினீயர். இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே அலுவலகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று திருச்சிக்கு சென்ற அவர் அங்கு வேலைகளை முடித்து விட்டு திரும்ப பஸ்சில் தஞ்சைக்கு வந்தார். புதிய பஸ்நிலையத்தில் இருந்து தனது அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அலுவலகத்தின் அருகே சென்ற போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேர் வாசுதேவனை தாக்கி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து வாசுதேவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து ஒரத்தநாடு தாலுகா சின்னபொண்ணுபுதூரை சேர்ந்த முருகேசன் மகன் சிட்டான் என்ற அரவிந்தை (20) கைது செய்தார். மேலும் மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றார்.