ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது
விக்கிரவாண்டி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் ரூ.11 லட்சத்தை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்
விழுப்புரம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
விக்கிரவாண்டி தாலுகா பிரம்மதேசத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 81), ஓய்வுபெற்ற ஆசிரியர். விழுப்புரத்தை சேர்ந்த ஜோசப், மரூரை சேர்ந்த மரியப்பிரகாசம் ஆகிய இருவரும் சுப்பிரமணியனின் குடும்ப நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் சுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரிடம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த எடையூரை சேர்ந்த ராமலிங்கம்(56) என்பவர் தங்கள் நண்பர்கள் என்றும் அவரிடம் பணம் கொடுத்தால் அவர் வட்டியை தவறாமல் கொடுப்பார், இதன் மூலம் நீங்களும் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவியிடம் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்தை ராமலிங்கம் பெற்றார். ஆனால் அந்த பணத்திற்கு ஒரு பைசா வட்டி வீதம் என்று கணக்கிட்டு அந்த வட்டியை கொடுக்காமலும், அசலையும் திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
பணம் மோசடி
இதனால் சுப்பிரமணியன், பலமுறை ராமலிங்கத்தை சந்தித்து, தான் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு ராமலிங்கம், பணம் தர முடியாது என்றும் நீங்கள் எங்கு சென்று வேண்டுமானாலும் புகார் கொடுக்குமாறும், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை செய்தபோது சுப்பிரமணியனிடம் 2 தவணைகளாக பணத்தை கொடுத்து விடுவதாக போலீசாரின் முன்னிலையில் ராமலிங்கம் கூறியதோடு ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்துக்குரிய காசோலையை பூர்த்தி செய்து தபாலில் அனுப்புவதாக 20 ரூபாய் பத்திரத்தில் எழுதிக்கொடுத்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ராமலிங்கம், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். பின்னர், ராமலிங்கத்தை சுப்பிரமணியன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதற்கு, போலீஸ் விசாரணையின்போது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொய்யான வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்ததாக கூறியுள்ளார்.
கைது
இதையடுத்து ராமலிங்கம் மீது நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று ராமலிங்கத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.