வெடி வைத்து காட்டு பன்றியை வேட்டையாடியவர் கைது


வெடி வைத்து காட்டு பன்றியை வேட்டையாடியவர் கைது
x

திருவண்ணாமலை கண்ணமடை காப்புக்காட்டில் வெடி வைத்து காட்டு பன்றியை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கண்ணமடை காப்புக்காடு பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் காட்டுப்பன்றியை சிலர் வேட்டையாடுவதாக வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையிலான வனக்காப்பாளர்கள் கொண்ட குழுவினர் கண்ணமடை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டுப்பன்றிக்கு வெடி வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வேளையம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 42) என்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாடி அவரது நிலத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று காட்டுப்பன்றியை கூறுபோட்டு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த சதாசிவத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் கொல்லப்பட்ட காட்டுப்பன்றி, எடை கல்லுடன் தராசு, அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் பலமுறை காட்டுப்பன்றிகளை வேட்டையாடியது தெரியவந்தது.

இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.


Next Story