முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 7½ கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
வேடசந்தூர் அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 7½ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர் அருகே நாயக்கனூரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 40) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
ஆனால் வீட்டில் கஞ்சா எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இளங்கோவிடம் போலீசார் விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டின் அருகே இருந்த முட்புதரில் சோதனை செய்தபோது, அங்கு 7½ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இளங்கோவையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் எரியோடு போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து எரியோடு போலீசார் வழக்குப்பதிந்து, இளங்கோவை கைது செய்தனர்.