வாலிபரை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது
திருவாடானை அருகே வாலிபரை கத்தரிக்கோலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா கலியநகரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் தொண்டியில் நண்டு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவதினத்தன்று தாமோதரன் பட்டினத்திற்கு முடிவெட்ட சென்றார். அப்போது பாசிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அகமது கனி ஷாம்பு (30) என்பவர் குடித்துவிட்டு பொது இடத்தில் அவதூறாக பேசிக் கொண்டிருந்தாராம். அவரை ராம்குமார் கண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் ராம்குமார் முடி வெட்டும் கடையில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த அகமது கனி ஷாம்பு கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ராம்குமாரை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராம்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் உத்தரவின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அகமது கனி ஷாம்புவை கைது செய்தனர்.