ரெயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது
சோளிங்கரில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், அன்புசெழியன், ஹேம்நாத் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம், சோளிங்கர் ரெயில் நிலையங்களில் உள்ள நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோளிங்கர் ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பாணாவரம் பகுதியை சேர்ந்த காத்தவராயன் (வயது 40) என்பதும், காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேஷன் அரிசியை கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து நடைமேடை பகுதியில் மறைத்து வைத்திருந்த 11 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து காத்தவராயன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரையும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசியையும் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.