தொழிலாளிக்கு கத்திக்குத்து; வேன் டிரைவர் கைது
திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
திருவாரூர் புது தெருவைச்சேர்ந்தவர் சுரேஷ் (வயது38). வேன் டிரைவர். இவர், தனது மனைவி புவனேஷ்வரியை பிரசவத்திற்காக திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு புவனேஷ்வரிக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு சுரேஷ், ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்தார்.
இந்த நிலையில் திருவாரூர் புதுத்தெருவை சேர்ந்த தொழிலாளி கண்ணன் (55) என்பவர் ஆஸ்பத்திரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். இவருக்கும், சுரேசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து
இதனால் கண்ணனை கண்டதும் ஆத்திரம் அடைந்த சுரேஷ், கண்ணனை கீழே தள்ளி விட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார்.
அப்போது கண்ணனும், கத்தியை பிடுங்கி சுரேசை குத்தினார். ஆஸ்பத்திரி வளாகத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி கத்தியால் குத்தி தகராறில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் அங்கு சென்று சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்தனர்.
தகராறில் படுகாயம் அடைந்த கண்ணன் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். லேசான காயம் அடைந்த சுரேசுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.