ஒடிசாவை சேர்ந்தவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒடிசாவை சேர்ந்தவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த 2019-ம் ஆண்டு வாலாஜா பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அப்பகுதி மக்கள் மீட்டு, திருப்பத்தூர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் அனுமதித்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையின் காரணமாக சற்று மனநலம் திரும்பியது. அதையடுத்து அவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம், பெரிதல்பூச் அருகில் உள்ள கொல்லதகோதரப்பள்ளியை சேர்ந்த கோபாலகிருஷ்ணரெட்டி (வயது 48) என்பதும், அவருக்கு திருமணமாகி ரீனா என்ற மனைவியும், கீதாஞ்சலி என்ற மகளும் இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணரெட்டி குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவரது சித்தி சூர்யா, தங்கை பார்வதி ஆகியோர் திருப்பத்தூர் வந்து கோபாலகிருஷ்ணரெட்டியை பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்தினர். பின்னர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் கோபாலகிருஷ்ணரெட்டி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், முடநீக்கியல் வல்லுனர் இனியன், மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து அவரது சித்தி கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் இறந்து இருக்கலாம் என நினைத்து இருந்தோம். ஆனால் அவர் உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவலால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம் என்றார்.