விவசாயி பணத்தை கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் சிறையில் அடைப்பு
விவசாயி பணத்தை கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேடு மேற்கு தெருவை சேர்ந்தவர் சோமு (வயது 52). விவசாயி. இவர் தான் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள கனரா வங்கிக்கு கடந்த 5-ந் தேதி சென்று 5 பவுன் தங்கக்காசுகளை அடகு வைத்து பெற்ற ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தை தாண்டி சென்ற போது, அதே சாலையில் பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சோமுவிடம் உங்களது பணம் கீழே விழுந்து விட்டது என்று கூறி, அவரின் கவனத்தை திசை திருப்பி, சோமுவின் மோட்டாா் சைக்கிளில் இருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர். இதையடுத்து சோமு அக்கம், பக்கத்தினர் உதவியுடன் விரட்டி சென்று ஒருவரை மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்து பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், காவலி தாலுகா, திப்பாவை சேர்ந்த நாகராஜூம் (51), அவருடன் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த மாதவன் (44) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். முன்னதாக நாகராஜூடம் இருந்து ரூ.33 ஆயிரமும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மாதவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.