தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது


கோவில்பட்டியில் தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கட்டிட தொழிலாளி கொலைவழக்கில் தேடப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கட்டிட தொழிலாளி

கோவில்பட்டி புதுக்கிராமம் சிவாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் பாலமுருகன் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவருடைய தந்தையிடம் வள்ளுவர் நகர் முதல் தெருவில் குடியிருக்கும் குட்டி என்ற வடிவேல் மகன் முத்துராஜ் என்ற கட்டிட தொழிலாளி ரூ.10 ஆயிரம் கடன்வாங்கி இருந்தார். சம்பவத்தன்று மாலையில் முத்துராஜிடம் பாலமுருகன் பணத்தை கொடுக்க கோரி அவதூறாக பேசிதிட்டினாராம். இந்த சம்பவம் பற்றி பாலமுருகனின் சித்தி ரேவதியிடம் முத்துராஜ் கூறியுள்ளார். ரேவதி பாலமுருகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதியை பாலமுருகன் அவதூறாக பேசினாராம்.

குத்தி கொலை

இந்த சம்பவம் பற்றி ரேவதி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கூறினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி, பாலமுருகனை வரவழைத்து எச்சரித்து அனுப்பி யுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் இரவு 10 மணிக்கு மேல் முத்துராஜிடம் போனில் பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் போன் இணைப்பை துண்டித்து விட்டு முத்துராஜ் கத்தியை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவரும் வழியில் சிந்தாமணி நகரில் நின்று கொண்டிருந்த பாலமுருகனை சந்தித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மீண்டும் அவமரியாதையாக பேசிய பாலமுருகனை முத்துராஜ் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார். இதில் பாலமுருகன் இறந்தார்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினார். தனிப்படை போலீசார் புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த முத்துராஜை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story