மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தகராறு
தென்காசி மாவட்டம் வெள்ளாளன்குளத்தை சேர்ந்தவர் முத்துராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து உள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் மது குடிக்க தனது மனைவி ஜமுனா என்ற காஞ்சனாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் பணம் கேட்டதால் முத்துராஜுக்கும், ஜமுனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராஜ், அரிவாளால் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து சீதாபார்ப்பநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தென்காசி கோர்ட்டு, முத்துராஜுக்கு ஆயுள்தண்டனை விதித்து கடந்த 2020-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
தள்ளுபடி
இதை எதிர்த்து முத்துராஜ், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்தனர்.
முடிவில், மனுதாரர் போதையில் இல்லாத நேரத்தில்தான் இந்த கொலை நடந்து உள்ளது. இதனால் தென்காசி மாவட்ட கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட வேண்டியது இல்லை. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.