வருமானவரித்துறை அதிகாரி என கூறி கரூர் சார்பதிவாளிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது


வருமானவரித்துறை அதிகாரி என கூறி கரூர் சார்பதிவாளிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது
x

வருமானவரித்துறை அதிகாரி என கூறி கரூர் சார்பதிவாளிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

பணம் கேட்டு மிரட்டல்

கரூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). இவர் கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று கண்ணன் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அதிகாரி போல் உடை அணிந்து கொண்டு ஒரு நபர் சார்பதிவாளர் கண்ணனிடம் வந்து, நான் வருமானவரித்துறை அதிகாரி என கூறி அறிமுகமாகி உள்ளார்.

பின்னர் தான் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிவதாக ஒரு அடையாள அட்டை காண்பித்து உள்ளார். பின்னர் அந்த நபர் சார்பதிவாளர் கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

கைது

இதனால் சந்தேகம் அடைந்த கண்ணன் உடனடியாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார் அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.

விசாரணையில், அந்த நபர் கோவை மாவட்டம் குரு கோவிந்தர் சாலை பகுதியை சேர்ந்த சங்குகுமார் (வயது 41) என்பதும், அவர் போலியாக வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதுபோல் அடையாள அட்டையை தயார் செய்து, சார்பதிவாளிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சங்குகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story