அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வும், பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம், மாணவர்களின் கல்வித்தரம், ஒழுக்கம் ஆகியவற்றில் பெற்றோர் ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இதே பள்ளியில் படித்து, தற்போது சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் யஷ்வந்த் ராவ் இங்கர்சால், நெமிலி தனி தாசில்தார் ரேவதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் பொறுப்புகளை தேர்வு செய்தனர். தலைவராக சந்திர முனிசாமி, துணைத்தலைவராக மலர், ஒருங்கிணைப்பு மற்றும் வழி நடத்துநராக தலைமை ஆசிரியர் சிவசங்கரன், ஆசிரியர் பிரதிநிதியாக பட்டதாரி ஆசிரியர் கதிரவன் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளாக கற்பகம், ஏழுமலை, எஸ்.சுரேஷ் உள்ளிட்ட 16 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதே பள்ளியில் பணிபுரியும் சமூகவியல் ஆசிரியர் சஞ்சீவி தனது பங்களிப்பாக ரூ.5000 வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோபி, ஊராட்சி தலைவர் அர்ச்சுனன், துணை தலைவர் சரன்யா விஜயன், பாஸ்கர், வேலாயுதம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.