அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ திருவிழா கொடியேற்றம்
அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரத்தில் கேரள மாநிலத்தில் அச்சன்கோவில் உள்ளது. அங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் அந்த கோவிலுக்கும் செல்வது வழக்கம். அந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று முன்தினம் புனலூரில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட ஆபரண பெட்டியில் இருந்த விலை உயர்ந்த ஆபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கொடி மரத்தில் நம்பூதிரி கண்டரரு மோகனரு தலைமையில் நம்பூதிரிகள் கொடியேற்றினர். அதன்பிறகு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கேரள தேவசம் போர்டு உதவி ஆணையர் உன்னிகிருஷ்ணன் நாயர், கோவில் மேல்சாந்தி ராஜேஷ் நம்பூதிரி, கோவில் நிர்வாக அதிகாரி வாசுதேவன் உன்னி, ஆலோசனை கமிட்டி தலைவர் பிஜுலால் பேலஸ் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று தொடங்கிய இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 9-ம் திருநாளான வருகிற 25-ந்தேதி தேரோட்டமும், 3-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை கருப்பன் துள்ளலும் நடைபெறுகிறது.