மண்டபம், பாம்பன், ஏர்வாடியில் படகு போக்குவரத்து நிறுத்தம்
பலத்த சூறாவளி காற்று, கடல் சீற்றம் எதிரொலியால், மண்டபம், பாம்பன், ஏர்வாடியில் படகு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பனைக்குளம்,
கடல் சீற்றம்
வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுகிறது. மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் சூறைக்காற்று, கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
இதனால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபம் காந்திநகர் கடல் பகுதியில் இருந்து மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள மனோலி தீவு வரையிலும் வனத்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அதுபோல் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடைதீவு வரையிலான சுற்றுலா படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, மன்னார்வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் குறைந்த பின்னர் வழக்கம்போல் தீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றனர். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மண்டபம் மற்றும் பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் படகில் பயணம் செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஏர்வாடி பிச்சை மூப்பன் வலசை கடற்கரை பகுதியில் வனத்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.