மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமையில் நடந்தது.
கவுன்சிலர்கள் கூட்டம்
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் நடராஜன், துணை தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அலுவலக உதவியாளர் சரவணன், செலவின பட்டியல் வாசித்தார்.
ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் பேசும்போது, வருகிற 15-ந் தேதி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் மண்டபம் ஒன்றியத்தில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
கூடுதல் நிதி
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- கவுன்சிலர் முத்துச்செல்லம்:- உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருந்து வசதிகள் இல்லை. உச்சிப்புளியில் கோழி கழிவுகளால் தொற்றுநோய் அபாயம் உள்ளது. சுகாதார துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கவுன்சில் பகுதியில் 4 ஊராட்சிகள் உள்ளதால் அடிப்படை வசதிகளை செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
கவுன்சிலர் அஜ்மல் சரிபு:- புதுமடம் ஊராட்சியில் நீண்ட காலமாக மின்சார பிரச்சினை உள்ளது. இங்கு கடந்த காலங்களில் நிரந்தர மின்சார பணியாளர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது மின் பணியாளர்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
தடுப்பு பணி
ஆணையாளர்:- மண்டபம் யூனியன் பகுதிகளில் அதிகமான நாய்கள் தொல்லை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அலெக்ஸ்:- எனது கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் காய்ச்சல்கள் அதிகரித்து வருவதால் போதுமான தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
இதில், கவுன்சிலர்கள் அலெக்ஸ், முருகன், ஆறுமுகம், சபியா ராணி, பேச்சியம்மாள், சுகந்தி, மாரியம்மாள், லட்சுமி, டிரோஸ், உஷா லட்சுமி, பேரின்பம், அலுவலக கணக்கர் நடராஜன் மற்றும் அலுவலக பொறியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். அலுவலக மேலாளர் (பொறுப்பு) சிவஉமா நன்றி கூறினார்.