மங்கலதேவி கண்ணகி கோவில் பகுதியில் குடிநீர் தேடி வரும் யானைகள்
கூடலூர் அருகே மங்கலதேவி கண்ணகி கோவில் பகுதியில் குடிநீர் தேடி யானைகள் வருகின்றன.
கூடலூர் அருகே வண்ணாத்தி பாறை, மங்கலதேவி பீட் பளியங்குடி, அத்தி ஊத்து, மாவடி வட்ட தொட்டி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் அரிய வகை மரங்கள் உள்ளன. மேலும் மான், யானை, கரடி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் வசிக்கின்றன. இந்த வனப்பகுதிகளில் மழைக்காலங்களில் விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் எளிதில் கிடைக்கிறது. கோடை காலங்களில் குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் வற்றி விடுகிறது. மேலும் புற்கள் காய்ந்து வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதனால் குடிநீருக்காக வனவிலங்குகள் மலை அடிவார பகுதிக்கு வர தொடங்குகின்றன. இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யானைகள் மங்கலதேவி கண்ணகி கோவில் மலை பகுதியை ஒட்டிய கேரள வனத்துறை அலுவலக பகுதிக்கு குடிநீர் தேடி வருகின்றன. எனவே வனப்பகுதியில் குட்டைகள் அமைப்பதுடன், உணவு கிடைக்கும் வகையில் புற்களை பயிரிட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.