2 நாட்கள் விசாரணையை முடித்து கேரளாவுக்கு சென்ற மங்களூரு போலீசார்


2 நாட்கள் விசாரணையை முடித்து கேரளாவுக்கு சென்ற மங்களூரு போலீசார்
x

குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி நாகா்கோவிலில் தங்கியிருந்ததை தொடர்ந்து மங்களூரு போலீசார் நாகர்கோவில் வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தி விட்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர். விசாரணையில் பயங்கரவாதி கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவில்கள் குறித்து கேட்டறிந்தது தெரியவந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி நாகா்கோவிலில் தங்கியிருந்ததை தொடர்ந்து மங்களூரு போலீசார் நாகர்கோவில் வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தி விட்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர். விசாரணையில் பயங்கரவாதி கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவில்கள் குறித்து கேட்டறிந்தது தெரியவந்தது.

குண்டு வெடிப்பு

கர்நாடகா மாநிலம் மங்களூரு பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவரும், ஆட்டோவில் பின் இருக்கையில் பயணம் செய்த பயங்கரவாதி ஷாரிக்கும் படுகாயம் அடைந்தனர். நாச வேலையில் ஈடுபட பயங்கரவாதி வெடி குண்டை எடுத்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷாரிக் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தமிழகத்தில் மதுரை, கோவை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு வந்து சென்றது தெரியவந்தது. பயங்கரவாதி ஷாரிக் 3 நாட்கள் வரை நாகர்கோவிலில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தது உளவுத்துறை விசாரணையில் தெரியவந்தது. நாகர்கோவிலில் எதற்காக அவர் தங்கி இருந்தார்? என்ற விவரம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் அவர் கேரளாவுக்குச் சென்று தங்கியிருக்கிறார்.

கண்காணிப்பு கேமரா

இந்த நிலையில் குமரியில் ஷாரிக் வந்து சென்ற இடங்களுக்கு மங்களூரு போலீசார் கடந்த 28-ந் தேதி நேரில் வந்து விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர். நாகர்கோவிலில், ஷாரிக் தங்கியிருந்த லாட்ஜில் விசாரணை நடத்தினர். லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் பயங்கரவாதி ஷாரிக்கிடம் செல்போனில் தவறுதலாக பேசிய கம்பளம் பகுதியில் வசித்து வரும் நபரிடமும் மங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர்.

2 நாள் விசாரணை

பயங்கரவாதி ஷாரிக் நாகர்கோவிலில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த போது லாட்ஜ் பணியாளர்களிடம் குமரி மாவட்ட கோவில்களில் வழிபாடு செய்வதற்காக வந்திருப்பதாக கூறி கன்னியாகுமரி, சுசீந்திரம் கோவில்கள் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் அவர் கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மங்களூரு போலீசார் அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.

நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக இருப்பதால் கன்னியாகுமரி மற்றும் சுசீந்திரம் கோவில்களுக்கு அய்யப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஷாரிக் நாசவேலையில் ஈடுபட சதி செய்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் மங்களூரு போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நாகர்கோவிலில் 2 நாட்கள் விசாரணை முடிந்ததை தொடர்ந்து மங்களூரு போலீசார் நேற்று முன்தினம் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story