கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில்  அகில இந்திய மாங்கனி கண்காட்சி  அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
x

கிருஷ்ணகிரியில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மாங்கனி கண்காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில். சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் மா அரங்கு, காவல்துறை சார்பில் துப்பாக்கிகள் கண்காட்சி உட்பட அனைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்குகளை அமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார். தொடர்ந்து 62 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 475 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முககவசம் கட்டாயம்

இந்த கண்காட்சியில் மா போட்டி அரங்கில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நீலேஷ்வரி, சாந்தி மல்கோவா, பாகில்வான், மஞ்சீரா, அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு ரக மாங்கனிகளும், மராட்டிய மாநிலத்தில் இருந்து 12 வகையான மாங்கனிகளும், ஆந்திரா 24, கர்நாடகா 16, தெலுங்கானாவில் இருந்து 20 வகையான மாங்கனிகள், ஐ.ஐ.எச்.ஆர். இருந்து 84 வகையான மா வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மா மூலம் செய்யப்பட்டிருந்த இனிப்பு, காரவகைகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

இதேபோல் 44 அரசு பண்ணைகளில் விளைவிக்கப்பட்டிருந்த மா ரகங்கள் உரிய விவரங்களுடன் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் பார்வையாளர்களை கவரும் வகையில் மலர்கள் மூலம் மாம்பழம், கிருஷ்ணகிரி அணை, மாம்பழக்கூடை, காய்கறிகள் மூலம் அண்ணா, கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓவியங்களும், புலி, முதலை, கொக்கு உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 25 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story