மாங்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்
மாங்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
லால்குடி,ஜூன்.25-
லால்குடி அடுத்த ரெட்டி மாங்குடி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், செல்லியம்மன் கோவில் திருவிழாவை 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி அளவில் புனித நீர் எடுத்து வந்து அய்யனாருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்பின்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 4-ந்தேதி காலை பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தலும், இரவு அம்மன் பல்லாக்கில் வீதி உலாவும் நடைபெற உள்ளது. 5-ந் தேதி மாலை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், குடி விடுதலும், அன்று இரவு செல்லியம்மனுக்கு காப்பு கட்டு விழாவும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 13-ந்தேதி காலை திருத்தேர் புறப்பாடும், கிடா வெட்டு நிகழ்ச்சியும், மாலையில் மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. 14-ந் தேதி செல்லியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 15-ந் தேதி மாலை செங்கமா முனிவர் சாமிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.