குருத்தோலை சப்பரத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா
ஆனி திருமஞ்சன விழாவையொட்டி குருத்தோலை சப்பரத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா வந்தார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆத்மநாத சுவாமி கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மாணிக்கவாசகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் மாணிக்கவாசகர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்.
அதன்படி நேற்று 7-ம் நாள் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து காலை பிட்டு நேர்பட மண்சுமந்த பேரருள் காட்சியும், மாலை 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
மாணிக்கவாசகர் வீதியுலா
இதையொட்டி 108 சங்குகள் மற்றும் குடங்களில் நீர் நிரப்பி வேத மந்திரங்கள் கூறி மாணிக்கவாசகருக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் குடங்களில் உள்ள புனித நீரையும், 108 சங்குகளில் உள்ள புனித நீரையும் ஊற்றி அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து, மாணிக்கவாசகரை அலங்காரம் செய்து குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் நிஜ ரூபகாட்சியில் மாணிக்கவாசகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்தநிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் கலந்து கொண்டார்.
தேரோட்டம்
இன்று (சனிக்கிழமை) காலை வெள்ளி படிச்சட்டம் வாகனத்தில் எல்லாம் வல்ல சித்தர் பெருமான் காட்சியும், மாலை திருவாசகத்திற்கு பொருள் உரைத்த காட்சியும், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் மதுரை பெருநன் மாநகர் தன்னில் குதிரை சேவகன் காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் மாணிக்கவாசகர் வலம் வருவார். இரவு வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் நடராஜர் அலங்காரத்திலும், 4-ந் தேதி காலை பிச்சாடனர் அலங்கார காட்சியும், பஞ்சப்பிரகார சேவையும் நடக்கிறது. 5-ந் தேதி வெள்ளி படிச்சட்டம் வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் மாணிக்கவாசகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.