தண்ணீர் இன்றி கருகும் மணிலா பயிர்கள்
தச்சம்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் இன்றி மணிலா பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாணாபுரம்
தச்சம்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் இன்றி மணிலா பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மணிலா பயிர்
வாணாபுரம் மையமாக கொண்டு நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மிக முக்கிய தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது.
அந்த வகையில் இப்பகுதி விவசாயிகள் கரும்பு, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களையும் பருவ கால பயிரான கேழ்வரகு, உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிர்களையும் அதிகளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மழையை எதிர்நோக்கி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாவுபட்டு, பறையம்பட்டு, தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், சின்ன கல்லபாடி, பெரிய கல்லப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் மணிலா பயிரிடப்பட்டு அதனை விவசாயிகள் பராமரித்து வந்தனர்.
தண்ணீர் பற்றாக்குறை
இந்த நிலையில் மணிலா பயிருக்கு போதுமான தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் பெரும்பாலும் மழை வரும் என்று எதிர்பார்ப்பில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மணிலா பயிர்களை அதிகளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வருவோம் ஆனால் எதிர்பார்த்த அளவு மழை இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது.
ஒரு சில பகுதிகளில் அணையில் தண்ணீர் செல்வதாலும் அந்த தண்ணீரையும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் நிலவு வருகிறது.
இதனால் பல ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி வருவதால் செலவு செய்த தொகையாவது கிடைக்குமா? என்று தெரியவில்லை என்று கவலையுடன் தெரிவித்தனர்.