ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும்மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருதுவிண்ணப்பிக்க அடுத்த மாதம் 25-ந்தேதி கடைசி நாள்
ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 25-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
மணிமேகலை விருது
ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள், நகர அளவிலான கூட்டமைப்புக ளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
2022-23-ம் ஆண்டுக்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.3 லட்சம் வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1 லட்சம், நகர பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம், பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3 லட்சம், நகர அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கலாம்
மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.5 ஆயிரம், நகர பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம், பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
ஆகவே சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் விண்ணப்பங்கள் வட்டார இயக்க மேலாளர் அலுவலகத்தில் பெறப்படுகிறது. நகர பகுதிகளை சேர்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் கடலூர் புதுப்பாளையம் 3-வது குறுக்கு தெரு, சீதாராம்நகரில் இயங்கி வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் இணை இயக்குனர், திட்ட இயக்குனர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் மணிமேகலை விருதுக்காக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.