முட்செடிகளால் காணாமல் போன மணிமுக்தா அணை பாசன வாய்க்கால்


முட்செடிகளால் காணாமல் போன மணிமுக்தா அணை பாசன வாய்க்கால்
x

முட்செடிகளால் மணிமுக்தா அணையின் பாசன வாய்க்கால் காணாமல் போனதுபோல் ஆகிவிட்டது. எனவே முட்செடிகளை அகற்றி வாய்க்காலை மீட்டெடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பார்த்து உள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே அணைக்கரைகோட்டாலத்தில் மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 36 அடி ஆகும். அணையின் மூலம் சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த அணையில் இருந்து பாசன வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரானது அணைக்கரைக்கோட்டாம், வாணியந்தல், தண்டலை, பெருவங்கூர், நீலமங்கலம், நிறைமதி, குரூர், முடியனூர் உள்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது. மேலும் இந்த வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மதகு மூலம் கிளை வாய்க்கால் வழியாக தண்டலை, பெருவங்கூர், வீ.பாளையம், மாடூர், வீரசோழபுரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

சம்பா சாகுபடி பணிகள் பாதிப்பு

இந்த நிலையில் பாசன வாய்க்காலை சரியாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால் வாய்க்காலில் அதிக அளவில் செடி, கொடிகள் மற்றும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. குறிப்பாக சில இடங்களில் வாய்க்கால் இருப்பது தெரியாத அளவுக்கு முட்செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன.

இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் பட்சத்தில் அந்த தண்ணீர் அணையின் கடைமடை பகுதி வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மணிமுக்தாஅணையில் இருந்து ஆண்டுதோறும் பாசனத்துக்காக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

நடவடிக்கை

அதன்படி இந்தாண்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளது. ஆனால் வாய்க்கால் தூர்ந்துபோன காரணத்தால், அந்த தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சம்பா சாகுபடி செய்ய எங்களை போன்ற விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதை தவிர்க்க முட்செடிகளால் காணாமல் போன வாய்க்காலை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story