மணிப்பூர் கொடூர சம்பவம்: மிருகத்தனமான, மனித நேயமற்ற செயல் - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயல் என்று தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கலவரம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ஒரு கும்பல் இரு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது. இரு பெண்களும் மர்மக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மே மாதம் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வெளி உலகிற்கு வந்துள்ள நிலையில், குற்றவாளிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள்மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனைப் பெற்றுத் தரவும், மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.