'மஞ்சளாறு கால்வாய் மதகுகளை சீரமைக்க வேண்டும்'
‘மஞ்சளாறு கால்வாய் மதகுகளை சீரமைக்க வேண்டும்’ என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், மஞ்சளாறு அணை-ஆலங்குளம் மற்றும் சிறுகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பால்பாண்டி மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில், கூட்டாத்து அய்யம்பாளையம் முதல் ஆலங்குளம் மற்றும் சிறுகுளம், சிவஞானபுரம் வரை சிமெண்டு கால்வாய் என்றழைக்கப்படும் மஞ்சளாறு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் உள்ள மதகுகள் சேதமடைந்துள்ளன. கரையும் பலமிழந்து இருக்கிறது. எனவே மதகுகளை சீரமைப்பதுடன், கரையையும் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
கண்மாய் கரைகள் சேதம்
கட்டக்கூத்தன்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி கொடுத்த மனுவில், சிறுமலையில் இருந்து குல்லலக்குண்டு தெப்பன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். ஆவரம்பட்டி கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் மாயாண்டி கொடுத்த மனுவில் ஆவரம்பட்டி கண்மாய் மதகுகள், கரைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அகரம்குளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மனோகரன் கொடுத்த மனுவில் அகரம்குளம் கண்மாயில் உள்ள பழைய நீர்தேக்கும் பலகைகளை அகற்றிவிட்டு இரும்பு பலகைகளை பொருத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
மனுக்களை பெற்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து விவசாயிகளுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.