மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பாபாநாசம் அருகே டாணா பகுதியில் தடுப்பணை அமைத்து மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.
பாபாநாசம் அருகே டாணா பகுதியில் தடுப்பணை அமைத்து மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றுள்ள கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கி, அந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்கு வந்த மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களது இருக்கைக்கே சென்று மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் 15 பேருக்கு மாதந்தோறும் மாதம் ரூ.1,000 விதவை உதவித்தொகை வழங்குவதற்கு ஆணைகளை வழங்கினார்.
பகுஜன் சமாஜ் கட்சி
பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன் தலைமையில் களக்குடி பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள், திரண்டு வந்து கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில், ''மானூர் தாலுகா களக்குடி கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழில் செய்யும் ஆதிதிராவிட மக்களுக்கு வருமானத்துக்கு அதிகமாக தவறான முறையில் வருமான சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கு கீழ் மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் விவசாய நிலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சூரியசக்தி மின் திட்டத்துக்கு வழங்கப் பட்டு வருகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பாபநாசம் டாணா பகுதியில் புதிதாக தடுப்பணை அமைத்து மானூர் பெரியகுளம், பள்ளமடை பெரியகுளம் மற்றும் இவற்றின் வழியாக கங்கைகொண்டான் குளம், கைலாசபுரம், ராஜாபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம், கொடியன்குளம், பரிவில்லி கோட்டைகுளம் வழியாக விளாத்திகுளம் வரை விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நொச்சிகுளம் பஞ்சாயத்து
பாளையங்கோட்டை யூனியன் நொச்சிகுளம் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் குமார், பேச்சி, செல்வி உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''நொச்சிகுளம் பஞ்சாயத்தில் தீர்மானத்தின்படி குடிநீர், சாலை, தெருவிளக்கு வசதி செய்து கொடுக்கவில்லை. முறைகேடுகள் பற்றி தனி அலுவலர் மூலம் விசாரணை நடத்த வேண்டும். எங்களது பகுதியில் அடிப்படை வசதி செய்யாமல் வீட்டுமனைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.
திருப்பணிகரிசல் குளம்
திருப்பணிகரிசல்குளம் விவசாயிகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் வழங்கிய மனுவில், ''திருப்பணிகரிசல் குளத்துக்கு சிறுக்கன்குறிச்சி, வேளார்குளம், வெட்டுவான்குளம், வடுகன்பட்டி பகுதியில் இருந்து மானாவாரி மழைநீர் வரக்கூடிய பாட்டாத்து ஓடையின் குறுக்கே தடுப்புசுவர் கட்டி உள்ளனர். இதனால் விவசாய நிலத்துக்கு செல்லும் பாதை தடைபடுகிறது.
இந்த நிலையில் 300 மீட்டர் தூரத்தில் மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம் 1,600 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும். எனவே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.
சமத்துவ மக்கள் கட்சி
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் கொடுத்த மனுவில், ''மானூர் அழகியபாண்டியபுரத்தில் இருந்து உக்கிரன்கோட்டை செல்லும் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுகுடிக்க வருவோரால் பெண்கள், மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆகியவற்றை அகற்ற வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.
இதேபோல் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் மனுக்களை கொடுத்தனர்.
போலீஸ் கட்டுப்பாடு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்தனர். கடந்த வாரம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வந்து தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தீக்குளிப்பு சம்பவங்களை முழுமையாக கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளார்.
அதன்படி கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாசலின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ய இரும்பு கம்பியால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இருபுறமும் 100 அடி நீளத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு, அங்கு வந்த பொதுமக்களிடம் மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட தீப்பற்றும் பொருட்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்து, அதன் பிறகு கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.