'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொதுமக்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை


மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொதுமக்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை
x

‘மாண்டஸ்’ புயலினால் அதி கனமழை வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 'மாண்டஸ்' புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் புயல் வீசக்கூடிய மாவட்டங்களில் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

70 கி.மீ. வேகக்காற்று

இந்திய வானிலை ஆய்வு மையம் 8-ந் தேதி (நேற்று) அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், 7-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து 550 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே 9-ந் தேதி (இன்று) நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதன் காரணமாக 8-ந் தேதி முதல் 11-ந் தேதிவரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர்களுக்கு அறிவுரை

அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன. கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் வழங்கியுள்ள அறிவுரைகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் தொடர்புடைய மாவட்ட கலெக்டர்கள் பின்பற்ற வேண்டும்.

படகுகள்

கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறையின்படி குறுஞ்செய்திகள் மூலமாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதைத்தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை செய்திகள் டிஎன்ஸ்மார்ட் செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். பேரிடரின் போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

அவசரகால மருந்துகள்

மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து பல்துறை மண்டலக் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுக்கும் எந்திரம் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

மின்கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும். மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசர காலத்தில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.

முதல்-அமைச்சரின் அறிவுரைகள்

பாதிப்பிற்குள்ளாகும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.

பால் மற்றும் பால்பவுடர் விநியோகம் தடையில்லாமல் நடைபெற உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும். நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.

முதல்-அமைச்சரின் அறிவுரைகளின்படி, புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

9-ந் தேதி இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும்போது திறந்த வெளியிலும் 'செல்பி' (தன்படம்) எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிர்வாக அறிவுறுத்தும்போது, அதை ஏற்று நிவாரண முகாம்களில் தங்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அளிக்கும் அதிகாரபூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அதிகாரபூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

மெழுகுவர்த்தி, டார்ச்லைட், தீப்பெட்டி, பேட்டரிகள், மருத்துவ கட்டு, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

பங்கேற்றோர்

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை டி.ஜி.பி. ரவி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் மற்றும் கடலோர காவல்படையின் அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story