முகமூடி திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள சின்னையா கார்டன் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதியில் காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தனர். மேலும் அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் அவர்களை பார்த்து விட்டார். உடனடியாக குடியிருப்பு மக்களுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான அப்பகுதியினர் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். பின்னர் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருட சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். சின்னையா கார்டன் மற்றும் டி.எம்.எஸ்.நகர் பொதுமக்கள், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியாவை சந்தித்து, முகமூடி திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கிட ரோந்து பணி மேற்கொள்ளவும், பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.