கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்குகுடும்பத்தினர், கால்நடைகளுடன் மனு கொடுக்க வந்த விவசாயி
கிருஷ்ணகிரி
சொத்து தகராறில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வந்த விவசாயி குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நந்திமங்கலம் அருகே உள்ள சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் லக்கப்பா. விவசாயியான இவருக்கும், இவரது சதோரர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் லக்கப்பா தனது குடும்பத்தினர் மற்றும் கால்நடைகளுடன் நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அவர் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நடவடிக்கை எடுக்கவில்லை
பின்னர் விவசாயி லக்கப்பா கூறுகையில், என் தந்தைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் ஓசூர் அடுத்த எலேசந்தரம் கிராமத்தில் உள்ளது. இதில் நாங்கள் 2 தலைமுறையாக கூட்டாக விவசாயம் செய்து வருகிறோம் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உறவினர்கள் விவசாயம் செய்ய விடாமல் தடுக்கின்றனர். மேலும் அடியாட்களுடன் வந்து எங்களை தாக்கினர். இது குறித்து பாகலூர் போலீஸ் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது குறித்து முறையிட கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் வந்தோம் என்றார். கால்நடைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை விவசாயி முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.