அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதம்


அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதம்
x

அன்னவாசல் சுற்றுவட்டார பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை

கனமழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்தநிலையில் இரண்டாவது நாளாக நேற்று மாலை அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த தொடர் மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் அன்னவாசல் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்பட்டது. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெற்பயிர்கள் சேதம்

இந்த தொடர் மழையால் அன்னவாசல் அருகே உள்ள பரம்பவயல் பெரிய கண்மாய் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர், நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள வாய்க்கால், குளங்கள், வாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story