பல ஆபத்துகள் சூழ்ந்துள்ளன: தமிழை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு


பல ஆபத்துகள் சூழ்ந்துள்ளன: தமிழை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
x

பல ஆபத்துகள் சூழ்ந்திருப்பதால் தமிழை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மதுரையில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

மதுரை


பல ஆபத்துகள் சூழ்ந்திருப்பதால் தமிழை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மதுரையில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

பொதுக்கூட்டம்

மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை பகுதியில் ம.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால், தற்போது அதனைவிட பெரிய ஆபத்து வந்து கொண்டிருக்கிறது.

நாட்டில் இந்தி, வேற்றுமையை ஏற்படுத்தும். ஒருமைப்பாட்டை குலைக்கும். இதன் காரணமாகத்தான் இந்தியை எதிர்க்கிறோம்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடியை போல், மக்களை ஏமாற்றுபவர் யாரும் கிடையாது. தமிழ் மீது காதல் இருப்பதாக மோடி கூறுகிறார். இதுபோல், செல்லும் இடங்களில் எல்லாம் அதற்கு தகுந்தார்போல் பேசுகிறார். இது எங்களின் தமிழ்நாடு, உயிரினும் மேலான இனிய தமிழ்நாடு. இந்தியை பொதுத்துறை நிறுவனங்களில் திணிக்கிறார்கள்.

கோல்வால்கர் ஒரு காலத்தில் கூறினார். அது என்ன? அதாவது, சனாதன தர்மம், இந்துத்துவா, அதற்கு பிறகு இந்தி, அதைதொடர்ந்து சமஸ்கிருதம். இதுதான் பா.ஜனதாவின் திட்டம். ஆனால், அந்த திட்டம் நடக்காது.

இந்தியை தடுக்க வேண்டும் என்றால், இந்துத்துவா சக்திகளை விரட்ட வேண்டும். தமிழகத்திற்குள், இந்துத்துவா வரவிடாமல் தடுக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். நாங்கள் கோவில்களுக்கு விரோதமானவர்கள் அல்ல. நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விரோதியானவன் அல்ல. மீனாட்சி அம்மன் கோவிலை பார்த்து வணக்கம் சொல்ல தயாராக இருக்கிறேன். நாங்கள் ஆலயங்களை மதிக்கிறோம். தேவாரம், திருவாசக பாடல்களை மதிக்கிறோம். கோவில்களில் தேவபாஷை எனக்கூறி சமஸ்கிருதத்தை நுழைக்கிறார்கள். சமஸ்கிருதத்தை திணிப்பதால், இந்துத்துவாவை எதிர்க்கிறோம். இதற்கு பா.ஜ.க.தான் தலைமை தாங்குகிறது. அதனால்தான் பா.ஜ.க.வையும் எதிர்க்கிறோம்.

தமிழக கவர்னர்

தமிழக கவர்னர், ஒரு நாள் தமிழகம் என்கிறார். அதற்கு, எதிர்ப்பு வந்தவுடன் தமிழ்நாடு என்கிறார். இப்படிப்பட்ட தவறான அணுகுமுறை கொண்ட கவர்னரை தமிழக சரித்திரம் இதுவரை கண்டதில்லை. மொழிக்கான விவகாரத்தில் ஏராளமான ஆபத்துகள் தமிழகத்தை சூழ்ந்திருக்கின்றன.. இந்தியை தவிர்க்க, தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், ம.தி.மு.க. மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், தலைமை கழக வக்கீல் சுப்பாராஜ், மாவட்ட அவைத் தலைவர் சக்திவேல், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் உதயராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story