பா.ஜ.க.வில் இளைஞர்கள் சேருவதால் பல கட்சிகள் கலக்கம்
பா.ஜ.க.வில் இளைஞர்கள் சேருவதால் பல கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன என்று அக்கட்சியின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் கூறினார்.
பா.ஜ.க. தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் நேற்று திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வேலூர் இப்ராகிம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு, அதை நிறைவேற்றாமல் மத்திய அரசை குறை கூறுகிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை 2 முறை குறைத்து இருக்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. எனவே தி.மு.க. அரசு வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும். இதற்காக பா.ஜ.க. தொடர் போராட்டங்களை நடத்தும். பா.ஜ.க. மக்கள் நலனுக்கான அரசியலை செய்கிறது. குடும்ப அரசியலை பொறுத்தவரை தி.மு.க.வுடன் எந்த கட்சியையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. தமிழகத்தில் பா.ஜ.க.வில் இளைஞர்கள் இணைந்து வருவதால் பல கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்களும், தி.மு.க. கூட்டணி தலைவர்களும் எதையாவது பேசுகின்றனர். ஊழல் செய்தவர்களின் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை கூறியதும், பலர் பயத்தில் இருக்கின்றனர். சினிமாவில் வரும்காட்சியை போன்று குறைவாக ஊழல் செய்தது யார்? என கணக்குப்போட்டு பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.