திருப்பூரில் 15 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட வாக்கத்தான் - மாரத்தான்
இலவச புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக திருப்பூரில் பிரமாண்டமாக வாக்கத்தான்-மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இலவச புற்றுநோய் மருத்துவமனை
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.60 கோடி மதிப்பில் இலவச புற்றுநோய் மருத்துவமனை அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் பங்களிப்புடன் அமைய உள்ளது. இதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக பிரமாண்ட வாக்கத்தான்-மாரத்தான் போட்டி திருப்பூர் ரோட்டரி அறக்கட்டளை, அனைத்து ரோட்டரி சங்கங்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை, திருப்பூரில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகள், காந்திநகர் ரோட்டரி சங்கம், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம், ரேவதி மெடிக்கல் சென்டர் சார்பில் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. தொடக்க விழா சிக்கண்ணா கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். புற்றுநோய் மருத்துவமனை திட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் டாக்டர் முருகநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட கவர்னர் இளங்குமரன், முன்னாள் கவர்னர் ஏ.வி.பி. கார்த்திகேயன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
மாரத்தான்
இதையடுத்து முதலில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள், தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, "இந்த மாரத்தான் நிகழ்ச்சியானது புற்றுநோயை எதிர்க்கவும், விரட்டி அடிப்பதற்காகவுமே ஆகும். இந்த நிகழ்ச்சி திருப்பூரையே திரும்பி பார்க்க செய்யும் அளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது" என்றார்.
நிகழ்ச்சி முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும், நன்கொடை வழங்கியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 21 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் விஜய் நவீன்ராஜ் முதலிடமும், சபரீஸ்வரன் 2-ம் இடமும், அரவிந்த் ராஜ் 3-ம் இடமும் பிடித்தனர். 10 கிலோ மீட்டர் போட்டியில் சுரேஷ்குமார் முதலிடமும், நித்திஷ் 2-ம் இடமும், ராம்பிரகாஷ் 3-ம் இடமும் பிடித்தனர். 5 கிலோ மீட்டர் பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் சவுமியா முதலிடமும், மவுலீஸ்வரி 2-ம் இடமும், ரிதன்யா 3-ம் இடமும் பிடித்தனர். சிறப்பு பரிசு மிருதுளாவுக்கு வழங்கப்பட்டது.
முதல் பரிசாக 1 பவுன் தங்கமும், 2-வது பரிசாக அரை பவுன் தங்கமும், 3-வது பரிசாக ¼ பவுன் தங்கமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். அப்போது ஒருசில சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் ஏற்கனவே வழங்குவதாக அறிவித்திருந்த தொகையைவிட கூடுதலாக வழங்க இருப்பதாக விழா மேடையிலேயே அறிவித்தனர். இதையடுத்து அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில் துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் பத்மநாபன், உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், ஐ.எம்.ஏ. கிளை தலைவர் டாக்டர் சரோஜா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன், வாக்கத்தான்-மாரத்தான் இணைத்தலைவர் அப்துல் கரீம், காந்திநகர் ரோட்டரி சங்க தலைவர் நித்யானந்தன், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.நாகராஜ், முன்னாள் நகர செயலாளர் சிவபாலன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் உள்பட போலீஸ் உயரதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் ஐ.எம்.ஏ. நிர்வாகிகள், திருப்பூர் பின்னலாடை சங்கங்களின் நிர்வாகிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், தனியார் பள்ளி நிர்வாகிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்கள் புற்றுநோய் தடுப்பு, மது ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இலவச உணவு
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டதுடன், குடிநீர், கழிவறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். திருப்பூரில் இலவச புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்ட நடைபெற்ற வாக்கத்தான்-மாரத்தான் நிகழ்ச்சி திருப்பூரையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் வெகு சிறப்பாக இருந்தது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.