மகாதேவர் கோவிலில் மார்கழி திருவிழா
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் மார்கழி திருவிழா
களியக்காவிளை,
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான தாமிரபரணி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நேற்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை, தீபாராதனை, பந்தீரடி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடியை உப தந்திரி வேணு நம்பூதிரி பூஜைகளுக்கு பின் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அகண்டநாம ஜெபம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜைகளில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடக்கும் விழாவில் முக்கிய நிகழ்வான, 7-ம் திருவிழாவான 4-ந் தேதி பிரதோஷம் அன்று நந்தி ஊட்டு பிரதோஷ சிவேலியும், 6-ந் தேதி திருவிழா திருவாதிரை நாள் அன்று ரிஷபவாகனத்தில் மகாதேவர் ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் அருகே வேட்டைக்கு எழுந்தருளல் நடக்க உள்ளது. விழாவின் 10-ம் திருவிழாவான 7-ந் தேதி தாமிரபரணி படித்துறையில் ஆராட்டு, அதை தொடர்ந்து கொடியிறக்கபட உள்ளது.