மார்கழி திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி


மார்கழி திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி கால்நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி கால்நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி திருவிழா

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் 10 நாட்கள் நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28 -ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, மெல்லிசை கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் 5-ந் தேதி தேரோட்டமும், அன்று நள்ளிரவு சப்தா வர்ண நிகழ்ச்சியும், 6-ந் தேதி மார்கழி திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.

கால்நாட்டு விழா

இந்த திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நேற்று காலை 8 மணிக்கு தாணுமாலய சாமி சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே நடந்தது. நிகழ்ச்சியில் மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு பந்தல் கால் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண்மடம் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.


Next Story