மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சிதம்பரத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரம்,
சிதம்பரம் காத்தாப்பிள்ளை தெருவில் பிரசித்தி பெற்ற மோகாம்பரி என்னும் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோில் மோகாம்பரி மாரியம்மன் எழுந்தருளினார். அதன்பிறகு அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் சிதம்பரம் நகரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.